தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ அழைப்பு எவருக்கும் விடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசு அல்லது சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கோ ஏனைய எதிர்க்கட்சிகளுக்கோ உத்தியோகபூர்வ அழைப்புகள் வரவில்லை என மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
எவ்வாறாயினும், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது என்பதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சருடன் தமது கூட்டணி மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்வைக்கும் என மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.