தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளுராட்சி விடயங்களை இராணுவமயப்படுத்துகின்றது ரெலோ முன்னாள் தவிசாளர் நிரோஷ்

அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தினை பயன்படுத்தி சாதாரண சிவில் நிர்வாகத்தினை செயல்திறன் குன்றியதாக மாற்றக்கூடாது. இராணுவமயமாக்கத்தினை ஊக்குவிக்க கூடாது என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில், இராணுவ குழுக்கள் இணைந்து துய்மிப்புப் பணியில் ஈடுபட்டமை குறித்து தனது அதிருப்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களையோ அல்லது கட்சித் தொண்டர்களையோ ஈடுபடுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் தூய்மிக்கப்பட்டிருக்குமாயின் நாம் அதனை வரவேற்றிருப்போம். மாறாக அரச அதிகாரத்தின் வாயிலாக, இராணுவத்தினை பெருமளவில் அழைத்து வந்து யாழ் மாநகர சபை ஆற்ற வேண்டிய தூய்மிப்புப் பணியை அரச எம்.பி இளங்குமரன் மேற்கொண்டுள்ளார்.

தங்களிடத்தில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தினை துப்புரவு செய்ய வேண்டிய நன்நோக்குக் காணப்படுமாயின் தங்கள் கட்சி ஆட்சியில் உள்ள அரசாங்கம் என்பதன் அடிப்படையில் சாதாரணமாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் சிவில் நிர்வாக ஒழுங்கு முறைகளுக்கு அமைவாக பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் மேற்படி நடவடிக்கையினை மேற்கொண்டிருக்க முடியும். யாழ் மாநகர சபையில் ஆளணி வளம் உள்ளது. யாழ் மாநகர சபை பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லையானால் ஆளுநர் மாகாண உள்ளுராட்சி திணைக்கள விடயங்களுக்கு அதிகாரம் பொருந்தியவராகவுள்ளார்.

அவர் ஊடாக ஏனும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இவற்றுக்கு மேலதிகமாக பொதுமக்களைத் திரட்டி அல்லது கட்சித் தொண்டர்கள் ஊடாக சிரமதானத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாது பெருமளவான இராணுவத்தினரைப் பயன்படுத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள். இராணுவத்தினரை சிவில் நிர்வாகம் ஊடக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் தவிருங்கள். கடந்த கேட்டபய காலத்திலும் இராணுவத்தினை உள்ளுராட்சி விடயப்பரப்புகளுக்குள் நுழைப்பதற்கு பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நான் உள்ளுராட்சி மன்றம் ஒன்றின் தலைவர் என்ற வகையில் அவற்றினை முற்றாக நிராகரித்திருந்தேன்.

நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே இராணுத்தின் தயவில் இயங்கினால் தங்கள் கட்சி சார்ந்த எதிர்காலத்தில் தெரிவாகக் கூடிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சபைகளில் சிறிய வேலைகளைச் செய்வதற்கும் இராணுத்தினையே அழைக்க எத்தனிப்பர். எனவே இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு இனமாக ஆட்பட்டிருக்கும் எமது இனத்திற்கு இன்றுவரையில் தங்கள் கட்சி ஆரோக்கியமான பொறுப்புக்கூறலையோ தீர்வை முன்வைப்பதற்கோ முன்வரவில்லை. இவ்வாறிருக்க சாதாரண விடயங்களிலும் இராணுவ பிரசன்னத்தினையும் இராணுவமயமாக்கத்தினையும் மேற்கொள்வது எமது மக்களை மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் செயற்பாடாகும் என வலி கிழக்கின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.