தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பெபரல் என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களை நியமித்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துதல் போன்றவற்றின் ஊடாக அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.
பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறையில் திருத்தம் செய்வதாகவும், புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்வதாகவும் கூறி அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தேர்தல்களை காலம் தாழ்த்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரையில் இவ்வாறான பல குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல மில்லியன் ரூபா இதற்காக செலவிடப்பட்ட போதிலும் எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சர்வஜன வாக்கெடுப்பு நடத்த நிதி வசதி இருந்தால் ஏன் தேர்தல் நடத்தப்பட முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறெனினும், தேர்தலில் செலவு செய்யும் நிதி குறித்த உத்தேச சட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய சட்டப் பரிந்துரைகளை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.