தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாடு

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் விளைவாக மிகவும் வலுவான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையிலிருக்கும் நிலையில், மாற்று அரசியல் கொள்கைகளையுடைய அனைத்துக் கட்சிகளினதும் சமூகக்குழுக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யக்கூடியவகையில் பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் முழுமையான விகிதாசார முறைமையின் பிரகாரமே நடாத்தப்படவேண்டும் என்று சிறிய அரசியல் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தேர்தல் முறைமையில் ஜனநாயகத்தன்மை பேணப்படுவதை உறுதிசெய்யும் நோக்கிலான கலந்துரையாடலொன்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் தலைமையில் சனிக்கிழமை கொழும்பிலுள்ள மெரினா பீச் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு நாட்டிலுள்ள சிறுகட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ),தமிழரசுக்கட்சி, ,புளொட், தமிழ் முற்போக்குக்கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மேலும் சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்ததுடன் தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கூறியதாவது:

தேர்தல் முறைமையில் ஜனநாயகத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கிலான இந்தக் கலந்துரையாடல் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின சமூகத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதக்கூடாது.

மாறாக இது நாட்டின் ஜனநாயகத்தையும் அனைத்து சிறுகட்சிகளினது பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்யும் நோக்கிலான கலந்துரையாடலாகும். அண்மைக்காலத்தில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுகட்சிகளை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆனால் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் வலுவான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையிலுள்ள சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதன் ஊடாகவே நிறைவேற்றதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான சமநிலையை உறுதிசெய்யமுடியும்.

உண்மையைக் கூறுவதானால் தேர்தல் முறைமை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிடமிருந்து பாடங்கற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விகிதாசார முறைமையின் ஊடாகவே மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்குள் உள்வாங்கப்பட்டது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதுமாத்திரமன்றி தேர்தல் முறைமை விவகாரம் ஒட்டுமொத்த நாட்டினதும் பிரச்சினை என்பதை மனதிலிருத்திச் செயற்படவேண்டும். பாராளுமன்றத்தில் அனைத்து இனங்களினதும் பிரதிநிதித்துவத்தைப்போன்றே பெண் பிரதிநிதித்துவமும் சமளவில் உறுதிசெய்யப்படுவது அவசியமாகும்.

அதனை முன்னிறுத்தி பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் அனைத்தும் விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையிலேயே நடாத்தப்படவேண்டும் என்ற பொதுநிலைப்பாடு எட்டப்படவேண்டும். அத்தோடு அம்முறையின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்றும் என்று வலியுறுத்தினார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், அரசியலில் பெண்பிரதிநிதிகளை உள்வாங்குவதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமது கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டபோதிலும் அவர் ஏற்கனவே அரசியல் பின்புலமொன்றைக் கொண்டிருந்தமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையில் தேர்தல் நடாத்தப்பட்டாலும் எல்லைநிர்ணய முறைமை நடைமுறையில் இருப்பதன் காரணமாக எதிர்பார்க்கக்கூடிய பிரதிபலனை அடைந்துகொள்ளமுடியாது என்று தெரிவித்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள எல்லைநிர்ணய முறையில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று குறிப்பிட்ட அவர், இரகசியமான முறையில் மேற்கொள்ளப்படக்கூடிய எல்லை நிர்ணயத்தின் விளைவாக விகிதாசார முறையின் ஊடாக உள்வாங்கப்படக்கூடிய சிறுகட்சிகளின் பிரதிநிதித்துவம் சிதைக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியதுடன் எல்லை நிர்ணயமுறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

அதேவேளை அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்துப்பேசிய தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டதைப்போன்று ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள வட்டாரங்களில் குறித்த எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்மூலமே அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், சமஷ்டி முறைமை தொடர்பில் கூட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய உறுதியான நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தினார்.

மேலும் ஒருபுறம் தேர்தல் முறைமை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பேசப்படும் அதேவேளை, மறுபுறம் சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றியடைந்ததாக அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பதிவுசெய்யும் ஜனாதிபதியின் போக்கு மற்றும் சிறுபான்மையினக்குழுக்களின் செயற்பாடுகள் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம் என்ற வெளிவிவகார அமைச்சரின் கருத்து என்பன நாடு பயணிக்கவேண்டிய பாதை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எத்தகையதாக இருக்கின்றது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக இதன்போது தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி உள்ளுராட்சி, மாகாணசபைகள், பாராளுமன்றம் ஆகிய மூன்று தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள், தெரிவுக்குழுவினால் ஒரேவேளையில் தயார்செய்யப்பட்டு, ஒரே சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புத்திருத்தமாகக் கொண்டுவரப்படவேண்டும் என்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகனாணசபைத்தேர்தல்களை விகிதாசார முறைமையின்கீழ் விரைந்து நடத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் இக்கலந்துரையாடலின்போது கூட்டாக வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் சிறுகட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவூப் ஹக்கீ;ம், வே.இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ ) வின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் உள்ளடங்கலாக மேலும் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.