தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும்: அடைக்கலநாதன் எம்.பி பகிரங்கம்

யாழ்.தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டியதுடன், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்றும் ரெலோ அமைப்பின தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று (10.02) இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முழுமையான ஆதரவு

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ் தையிட்டி விகாரைக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை தெரிவிக்கும்.

அது உண்மையில் உடைக்கப்பட வேண்டிய விடயம். வடகிழக்கில் பிக்குகள் மற்றும் சில திணைக்களங்கள் நினைத்ததை செய்யும் ஒரு நிலை காணப்படுகின்றது.

எனவே இந்த விகாரை உடைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கான ஆதரவை நாங்கள் வழங்குவோம். மக்களுடைய விருப்பமும் அதுவே என்றார்.