தொப்புள்கொடி உறவு என்பது ஒரு மேடை பேச்சாக இருக்க கூடாது: யாழ் இந்திய துணைத்தூதுவர் பேச்சு

தொப்புள்கொடி உறவு என்பது ஒரு மேடை பேச்சாக இருக்க கூடாது, அதையும் தாண்டி இருக்க வேண்டும் என யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கடற்தொழில் சம்மேளனத்திலும் பூநகரி நக்ரா நிறுவனத்திலும் மற்றும் கௌதாரி முனை பொதுநோக்கு மண்டபத்திலும் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடற்தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான உதவிகள் என்ற வகையில் தலா 6000 ரூபா பெறுமதியான 200 உலருணவுப் பொதிகள் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் இந்திய துணைத்தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும் துணைதூதரகத்திற்கு வருகை தாருங்கள் அதனை உங்களது வீடாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்திய அரசு தொடர்ந்தும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கடற்தொழிலாளர் சமூகத்தில் கொண்டுள்ள அக்கறை காரணமாக இவ் உதவிகளை வழங்கி வைக்கின்றது. எங்களது எண்ணங்கள் சிந்தனைகள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்.

இந்திய அரசு வடக்கில் குறிப்பாக கடற்தொழிலாளர் சமூகம் பயன்படுகின்ற வகையில் முதலீடுகளை மேற்கொள்ளும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.