தோட்ட தொழிலார்களுக்கு உடன் தடுப்பூசியை வழங்குங்கள்

அந்நிய செலவாணியை பெற்றுத் தருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுங்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிவருகின்றது. குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலுமே தொற்றாளர்கள் அதிகமாக இனம் காணப்படுகின்றார்கள்.

தொற்றாளர்கள் பலர் தங்களுடைய வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் தொற்றாளர்களை அனுமதிப்பதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூட வேண்டிய ஒரு நிலைக்கு சுகாதார அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். பல பெருந்தோட்ட பகுதிகள் முழுமையான முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்களும் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரிகின்ற தொழிலார்களும் தங்களுடைய வேலை வாய்ப்பை இழந்துள்ளதுடன் தங்களுடைய வருமானத்தையும் முழுமையாக இழந்துள்ளனர்.

தற்பொழுது எமது நாட்டில் பாரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தோட்ட தொழிலாளர்களும் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிகின்றவர்களும் தொடர்ந்து தங்களுடைய கடமைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனவே இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஏனெனில் இவர்கள் தொடர்ச்சியாக தொழில் செய்வதன் மூலமே அவர்களுடைய பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.