தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையை முதலிடம் பிடிக்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்:ரெலோ வினோ நோகராதலிங்கம்

இலங்கையில் ஏற்றுமதி செயற்பாட்டில் சீனர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இலங்கையின் அரசியலிலும் சீனா ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும் செலுத்துவதை உங்களால் தடுக்க முடியாது. அதேவேளை இலங்கை அரசு தோல்வியடைந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கவும் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் அணிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கவும் போட்டியிடுகின்றனதென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த நாடு அனைத்து துறைகளிலும் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் பல தடைகளையும் சவால்களையும் சந்தித்து வரும் துர்ப்பாக்கியம் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தோல்வியடைந்து கொண்டிருக்கும் அரசினால் ஒரு நாட்டினை வெற்றியடைய செய்ய முடியாது. பொருளாதார, அரசியல் ரீதியாக இந்த அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. ஆனால் அதற்காக இந்த நாட்டை தோல்வியடைந்த நாடாக மாற்றிக்கொள்ள மக்கள் யாரும் அனுமதிக்கப்பபோவதில்லை.

ஆட்சிபீடமேறிய மிக குறுகிய காலத்தில் இந்த அரசு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிய மிக மோசமான மக்களினால் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை நீடித்தால் காத்திருக்கும் பேராபத்துக்களிலிருந்து இலங்கையை காப்பாற்ற முடியாது.

இறைமை, இறைமையென மூச்சுக்கொருதடைவை முழங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசு நாட்டின் சுவாசமே அடங்கிப்போவதைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாகவுள்ளது. அரசியல் தீர்வுக்காகவும் மனித உரிமை விடயங்களுக்காகவும் பொருளாதார மீட்சிக்காவும் நிரந்தர சமாதானத்துக்காகவும் உண்பதற்காக, உறங்குவதற்காக மக்கள் இன்று வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் தமிழ், முஸ்லி ம் மக்களும் தலைவர்களும் சிங்கள மக்கள், தலைவர்களுடன் இணைந்து போராடியது போன்று இலங்கையின் இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களை மீண்டும் இணையுமாறு பிக்குகள் அழைக்கின்றனர். மூவின மக்களும் இணைந்து போராடினால் தான் சுதந்திரம் பெற முடி யுமென்பதனை பௌத்த தலைவர்கள் உணர்ந்திருப்பது நல்ல அறிகுறி.