நடமாடும் சேவை ஏமாற்று வேலை – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

நடமாடும் சேவை ஏமாற்று வேலை: வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணிப் பிரச்சனை தொடர்பான நடமாடும் சேவையால் மக்கள் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அதனை தீர்ப்பதற்கு அமைச்சரவை நேரடியாக கையாளும் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (27) இடம்பெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவையில் கலந்து கொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நடமாடும் சேவை என்பது வரவேற்கத்தக்கவிடயம். ஆனால் எமது மக்கள் இந்த சேவையிலே நம்பிக்கை அற்றுப்போய் இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக அந்தந்த பகுதிகளின் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு சொல்லும் பதிலையே இப்போதும் சொல்லப்போகின்றார்கள். எனவே மக்கள் இதில் தீர்வைப்பெற்று கொள்ள முடியும் என்பதில் வாய்ப்பே இல்லை.

பலவருடமாக தீராதுள்ள பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்ற ஆர்வத்தோடு மக்கள் வந்துள்ள நிலையில், இந்த நடமாடும் சேவையினுடைய செயற்பாடு நல்லதாக இருக்கவில்லை என்பது எனது கருத்து. இந்த நடமாடும் சேவைகள் தொடர்ச்சியாக ஒரே தவறையே விட்டுக்கொண்டிருக்கின்றது. அதனை நிறுத்துவதென்றால் அமைச்சரவை ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். இந்தகாணி பிரச்சனையை நேரடியாக கையாளுகின்ற ஒரு வழிமுறையை அவர்கள் செயற்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.