இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கை காரணமாக, சுமார் 35 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் பாரிய போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்தத் தலையீடு செய்யுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கையில் உள்ள ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதமொன்றை கடந்த 18ஆம் தேதி அனுப்பியிருந்தன.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழை நிர்வாக மொழியாக்கவும், ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை அமைக்கவும் 13வது திருத்தம் வழிவகை செய்கிறது.
இப்போது இந்தத் திருத்தத்தை அமலாக்க தமிழ் கட்சிகளுக்குள்ளேயே எதிப்பு கிளம்பியுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லேயின் ஊடாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஏழு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த கடிதத்தை, நரேந்திர மோதிக்கு அனுப்பியிருந்தனர்.
இப்போது எதிர்ப்பு ஏன்?
இந்த நிலையில், 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு கோரி, இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு தற்போது எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை நிராகரிப்பது மற்றும் 13வது திருத்தம் வேண்டாம் ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
13வது திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, மக்களை தெளிவுப்படுத்துவது மற்றும் பேரணியின் ஊடாக மக்களை தெளிவுப்படுத்துதல் போன்ற திட்டங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தற்போது முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் பாரிய போராட்ட பேரணி நடத்தப்பட்டு, மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது.
70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தாம் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, அந்த அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை இவர்கள் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தமானது, இனப் பிரச்னைக்கான தீர்வு இல்லை என கூறப்பட்டு இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியவர்கள் சொல்வதென்ன?
13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, வட மாகாண சபையை மீண்டும் கொண்டு வரவே தாம் முயற்சித்து வருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
13வது திருத்தச் சட்டமானது, தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாது என்பதனை தாமும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறுகின்றார்.
அரசியலமைப்பில் தற்போதுள்ள சட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே தாம் கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றால், தாம் அந்த சட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து விட்டோம் என்ற வகையிலான மாயையை உருவாக்கும் நோக்கிலேயே இந்த பேரணி முன்னெடுக்கப்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்றால் என்ன?
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி இந்த 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த உடன்படிக்கை அப்போது கைச்சாத்திடப்பட்டது.
இதன்படி, நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்றன. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.
இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கலந்து காணப்படுகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.
இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13வது திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக தமிழுக்கும், ஏனைய மாகாணங்களில் நிர்வாக மொழியாக சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது.
இதேவேளை, இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் ஒன்பது மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.
எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதன்படி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்பு சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரிந்து உத்தரவு பிறப்பித்தது.
இலங்கை அரசின் நிலை என்ன?
தமிழர் பிரச்னை தீர்வுக்கு இலங்கை – இந்திய உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டமே, சிறந்த ஆரம்பமாக இருக்கும் என ஆளும் தரப்பிலுள்ள தமிழ் அரசியல்வாதியான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
இந்த சட்டத்தை அமல்படுத்துமாறு, பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் இன்று ஒன்றிணைந்து, நரேந்திர மோதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
13வது திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் உள்ளக விவகாரங்களில், சர்வதேச நாடுகள் நேரடியாக தலையிட வேண்டியதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே, உள்ளக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னைகளை கொண்டு வந்து, அதனூடாக தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார்.