நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவு பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்ய 10 ஆம் திகதி வரை கால அவகாசம்

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பதிவுகளில் முரணப்பாடுகள் இருந்தால் அனுப்பிவைக்கப்படும் மேல்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் முதியோர்கள், விதவைகள் என வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாததால் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடமபெற்றமை குறிப்பிடத்தக்கது.