இலங்கையில் நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் இணைந்து நேரடியாகப் பணியாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டிலுள்ள வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் வருமான வீழ்ச்சி, உணவுப்பாதுகாப்பின்மை, போசணை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் அவர்களுக்கு உதவுவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டம் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே அசூஸா குபோட்டா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,
அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகங்களுக்கு இடையில் பரந்துபட்ட வகையில் மீளெழும் தன்மையைக் கட்டியெழுப்பல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு இலங்கையில் நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்கள் மற்றும் குடும்பங்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதற்கு நாம் அதிக முக்கியத்துவம் வழங்கியிருக்கின்றோம். அதனைச் செய்வதற்கு நாம் பல்வேறு தரப்பினருடன் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும்.
அதன்படி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டமும் இலங்கையில் இயங்கிவரும் ஹிர்டரமனி ஆடை உற்பத்தி நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கவிருக்கும் உதவிச்செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும். குறிப்பாக அக்குடும்பங்கள் பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பயிரிடுவதற்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், அதனூடாக அக்குடும்பங்களின் வருமானம் மற்றும் போசணைசார் தேவைகள் பூர்த்திசெய்யப்படும் என்று குறிப்பிட்டார்.