நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு – அலைனா டெப்லிட்ஸ்

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என பதவியில் இருந்து விலகவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்ட அவர், அனைவரும் மனித உரிமைகளை மதித்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஜனநாயக அரசாங்கமொன்று அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்பதனால் கடந்த கால மற்றும் நிகழ்காலத்தில் உள்ள மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நல்லிணக்க முயற்சிகள், நிலைபேறுகால நீதிப் பொறிமுறையையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அலைனா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பொருளாதார ரீதியில் வெற்றியளிக்கக்கூடிய கொள்கைகளை வகுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.