நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக கோண்டாவில், திருநெல்வேலி, பாற்பண்ணை, கொக்குவில் போன்ற பகுதிகளில் அதிகளவில் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான கு.மதுசுதன் அரசு பொறுப்பற்ற வகையில் நாட்டை முடக்காமலிருந்தாலும் நீங்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாக உங்களினதும், உங்கள் அன்புக்குரியவர்களினதும் பெறுமதியான உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் அவசியமான விடயங்களுக்கு மாத்திரம் வீடுகளுக்கு வெளியே செல்லுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எத்தனையோ பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ பேர் கொரோனாத் தொற்றால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் குடும்பங்களைப் பிரிந்திருக்கின்றார்கள். எத்தனையோ பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் குடும்பங்களைப் பிரிந்திருக்கின்றார்கள்.
கொரோனாவால் குடும்பங்களைப் பிரிந்திருந்து இறந்தவர்களுக்கு கிரியைகள் செய்ய முடியாத நிலையில் பலரும் மனரீதியாகப் பாதிக்கப்படுவதுடன் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் பலரும் தவித்து வருகின்றார்கள்.
யுத்தக் காலப் பகுதியை விடக் கொடிய சூழலில் வாழுகின்ற உணர்வை கொரோனாப் பெருந் தொற்று தற்போது ஏற்படுத்தியுள்ளது. இந்த இடரை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, முறியடிப்பதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.