மக்கள் நலன்சார்ந்த வரவுசெலவுத் திட்டம் என்ற வகையில் அதனை எப்போதும் தோற்கடிப்பதற்கு நாங்கள் துணைபோகக் கூடாது என நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்தார்.
அந்தவகையில் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 45 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் அவாக்களையும், அவர்களின் அன்றாடத் தேவைகளையும், அபிவிருத்திகளையும் கருத்திற் கொண்டு தான் நல்லூர் பிரதேசசபையின் நடப்பாண்டுக்குரிய வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பித்தல் தொடர்பான கூட்டம் புதிய தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் அண்மையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லூர் பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வரவு செலவுத் திட்டங்களுக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) எப்போதும் தனது ஆதரவைத் தெரிவித்து வந்தமை இங்கே பதிவு செய்யப்பட வேண்டிய விடயம்.
2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கு எப்போதும் எங்களின் ஆதரவிருக்கும்.
நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் நலன்சார்ந்த வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு மகிழ்ச்சியையும், முன்னைய தவிசாளரை விட இன்னும் சிறப்பாகச் செயற்பட என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.