பிரதமரிடம் கேள்வி கேட்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சபையில் தர்க்கம் ஏற்பட்டது.
நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் உறுப்பினர்கள் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் கடந்த ஒருமாத காலமாக நடைபெறவில்லை. ஏன் இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருகின்றது.
இது நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகுமென்றார். இதற்கு சபைமுதல்வர் தினேஷ் குணவர்தன பதிலளிக்கையில்,
பிரதமரிடம் கேள்வி கேட்கும் சம்ரதாய நிகழ்வை நாங்கள் நிறுத்தவில்லை. கொவிட்-19 காரணமாக நாடாளுமன்ற அமர்வு நடைபெறாததால் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது.
அதேபோன்று பிரதமர் வெளிநாட்டுக்கு சென்றிருந்ததால் அது ஒத்திவைக்கப்பட்டது என்றார்.
அதனைதொடர்ந்து எழுந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நாடாளுமன்றம் வரமுடியாத நிலை ஏற்பட்டால் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பிரதமருக்கு பதிலாக சபை முதல்வருக்கு பதிலளிக்கலாம்.
அத்துடன் அரசாங்கத்தில் திறமையான புதிய உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்கினால், அது அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.
அதனால் அரசாங்கம் தங்களுக்குள் இருப்பவர்களுக்கு பதவிகளை பகிந்தளித்து செயற்பட்டால் புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சியாகவும் இருக்கும் என்பதுடன் கேள்வி கேட்பதை ஒத்திவைக்கவேண்டிய தேவையும் இருக்காதென்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதமர் அனுபவத்துடன் தெரிவித்த கருத்தை மதிக்கின்றேன். ஆனால் அவர் அன்று இவ்வாறு செயற்பட்டிருந்தால் வீட்டுக்கு சென்றிருக்க மாட்டார். என்றாலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உறுப்பினர்களுக்கு அதிகாரங்களை பிரித்து, அதிகமானவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கி இருக்கின்றனரென்றார்.
அதற்கு ரணில் விக்கிரமசிங்க எம்பி தெரிவிக்கையில், நான் வீட்டுக்கு சென்றமை தொடர்பில் கவலையடையவில்லை. என்றாலும் தற்போது இருப்பவர்கள் செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில்தான் கவலையாக இருக்கின்றது என்றார்.