நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் கைது!

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடனடியாக மீள பெறுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லை, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தினர்.

எனினும், குறித்த ஆர்ப்பாட்டமானது தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு எதிரானது எனத் தெரிவித்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டமையால், அங்கு பாரிய சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பொலிஸார் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதை அடுத்து அங்கு பொலிஸாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகள் ஏற்பட்டன.

அதேநேரம, குறித்த சட்டமூலத்திற்கு எதிராக இன்று ஹட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அங்கும் ஏற்பட்ட சர்ச்சை தீவிரமடைந்ததை அடுத்து ஜே.வி.பியின் நான்கு உறுப்பினர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஹட்டன் பகுதியிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.