நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கை : இயல்பு நிலை பாதிப்பு

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் (15.03.2023) நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பு காரணமாகஅனைத்து மாவட்டங்களின் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளைத் தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்க வேண்டும், மாணவர்களின் போதனை குறைபாட்டை நிவர்த்தி செய், பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொடு உள்ளிட்ட பல்வேறு பதாகைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்களும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

மலையகம்

தூரப் பகுதிகள், பிரதேசங்களில் உள்ள தோட்டங்களிலிருந்து பிரதான மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சைபெற வந்த மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேவேளை, பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகம் அளிக்கவில்லை. மாணவர்களின் வருகையும் இருக்கவில்லை. விடயம் அறியாமல் பாடசாலைக்கு சமூகம் அளித்த ஒரு சில மாணவர்கள் திரும்பிச்சென்றனர். மலையகப் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும் பணிகள் இடம்பெறவில்லை. அரச வங்கிகள் உட்படப் பல துறையினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.

மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று நடைபெற்றுவருவதுடன், மக்கள் தமது அன்றாட கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு சுமார் 60க்கு மேற்பட்ட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கமும், ஆசிரியர் சேவை சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிபர், ஆசிரிய சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையினர், உள்ளிட்டோர் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் பாடசாலை சென்ற மாணவர்கள் வீடு திரும்பிச் சென்றுள்ளார்கள். மேலும், மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள் இன்று மாவட்ட மருத்துவமனையில் கிளினிக் மற்றும் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் மருந்தினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வீடு திரும்பியுள்ளார்கள்.

வவுனியா

வவுனியாவில் ஆசிரிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘மக்களைப் பொருளாதார சுமையிலிருந்து காப்பாற்று, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதை நிறுத்து, அடிப்படை சட்டங்களைச் சீரழிக்காதே, முதலாளிகளுக்கு வரிச் சலுகை உத்தியோகஸ்தர்களுக்கு வரி அறவீடு’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பத்தைகளைத் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர் சேவா சங்கம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

 

திருகோணமலை
தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை திருவண்ணாமலை பிரதேச பொறியாளர் காரியாலயத்திற்கு முன்னால் ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், மீதமுள்ள சம்பளப்படிகள், மருத்துவ விடுப்பு படிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மருத்துவ விடுமுறைக்கான கொடுப்பனவை தடுக்காதே அநியாயமாக அறவிடப்படும் விடுதி வாடகைகள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோசமிட்டுள்ளனர்.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.