நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் போது, இலங்கை மின்சாரச சபை வழங்கிய சேவைக்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளின் ஹேவகே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவரால் கோரப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே இலங்கை மின்சார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை ஜூலை 26ஆம் திகதி கேட்டிருந்ததாகவும், மின்சார சபை இன்று தகவல் வழங்கியதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெட்டியவில் உள்ள வீடொன்றில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்வார் எனவும் பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு, பின்னர் உபகரணங்களை அகற்றியதாகவும், இதற்காக 2,682,246 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
செலவிடப்பட்ட தொகை தொடர்பான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் தொகை வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மிஹிந்தலை விகாரையில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைப் போன்று மெதமுலன வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டுமென நளின் ஹேவகே தெரிவித்தார்.