நிகாப் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து பாகிஸ்தான் கவலை

இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா தடைசெய்யப்படுவதானது உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சாத் கட்டக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு காயத்தை ஏற்படுத்தும்.

சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் பிற சவால்களால் இன்றைய பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும் என்றார்.

நாட்டில் புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடை செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந் நிலையில் அது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையிலேய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.