நிட்டம்புவ ஆர்ப்பாட்டத்தில் சிக்கி அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழப்பு

நிட்டம்புவயில் இன்று(09) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“குறித்த பாராளுமன்ற உறுப்பினர். அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.” என்று ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்த, பின்னர் அவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.