நிதி அமைச்சராக பதவியேற்கிறார் பிரதமர் ரணில்?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரை பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செயற்படுவார் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கஞ்சன விஜேசேகர, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நிதியமைச்சை பொறுப்பேற்க விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தாக தெரியவருகிறது.

23 அமைச்சரவை அமைச்சர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான செயலாளர்களும் இன்றையதினம் நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர்.

ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இதுவரை நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்று சர்வதேசம் உட்பட பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த அமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் நியமனம், நாளை (25) இடம்பெறலாம் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.