எங்களுடைய போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா, தமக்கு அந்த நிதி வேண்டாம் எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக வரவு – செலவுத்திட்டத்தில் (பட்ஜெட்) 300 மில்லியன் ரூபாய் நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், “நாங்கள் 1,838ஆவது நாளாக இன்று போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காக பாராளுமன்ற வரவு – செலவுத் திட்டத்திலே, காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளனர்.
“இவ்வாறு நிதி ஒதுக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எந்த ஒரு தாயும் இந்த நிதியை வேண்டுவதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், நாங்கள் இந்தப் போராட்டத்தில் உண்மையான ஆதாரங்களுடன், கண்கண்ட சாட்சியங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
“எங்களுடைய போராட்டத்துக்கும், எங்களுடைய பிள்ளைகளை எங்கே கொண்டு சென்று வைத்திருக்கிறார்கள் என்பதற்கும் பதில் கூற வேண்டும். எங்களுக்கு நிதியைத் தந்து ஏமாற்ற வேண்டாம்” என்றார்.