நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

22-05-2023 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

1983-2009 காலகட்டத்தில் இலங்கையில் நடந்த ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரங்கள் என்பவற்றினால் உயிரிழந்த பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், பொலிஸார், முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக நினைவிடமொன்றை அமைப்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

இதற்காக, நிபுணர் குழு கடந்த நாட்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகளை நடத்தியதுடன், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிபுணர்களுடன் ஆலோசனைகளையும் நடத்தியது.

இந்த பொதுமக்கள் அமர்வுகள் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டன. பங்குபற்றிய மக்களுக்கு தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தமது அபிலாஷைகள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

நினைவேந்தல் செய்வதற்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியதோடு பல்வேறு குழுக்களும் தனிநபர்களும் நினைவேந்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்வுகளை வெவ்வேறு வழிகளில் முன்னெடுப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வளமான அறிவுக் கட்டமைப்பையே இது வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, நாட்டின் மோதல்கள் தொடர்பான கடந்த காலத்தைப் பற்றி அறிக்கையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது வேறுவிதமாகக் கையாளும் முயற்சியின் போது இந்தப் பங்களிப்புகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது முன்வைக்கப்பட்ட பரந்த அளவிலான யோசனைகளை பரிசீலித்த பின்னர் இந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இலங்கையின் மோதல்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுடன் உருவான கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளை பாதுகாத்து வைக்கும் குறியீட்டு ரீதியிலான கட்டடமொன்றை அமைக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக கூட்டு அர்ப்பணிப்பை உறுதி செய்வதும் அனைத்து இலங்கையர்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

குழுவின் அறிக்கையைக் கையளித்த போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தார்.