நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது – அரசியல் கைதியின் தயாரின் அஞ்சலியில் நிரோஷ்

தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி. மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் பொறுப்புச் சொல்லுதலில் இருந்து அரசை விடுவிப்பதற்கான உத்தியாகவே அமைகின்றது என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அரசியல் கைதி பார்த்திபனின் தயாரின் இறுதிச் சடங்கு நேற்று திருநெல்வேலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

அங்கு அஞ்சலியுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும் என்றும் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் பொறுப்புச் சொல்லுதலில் இருந்து அரசாங்கத்தை விடுவிப்பதற்கான உத்தியாகவே அமைவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், போருக்குப் பின் 13 ஆண்டுகளாகியும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படவில்லை.
கடந்த 26 ஆண்டுகளாக பிள்ளையை அரசியல் கைதியாக பிரிந்து அந்தப் பிள்ளையின் விடுதலைக்காகப் போராடிய தாய் இன்று மரணித்துள்ளார்.

அதுபோன்று கடந்த வராம் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவர் சகாதேவன் நிலக்சனின் தாயாரும் மரணமடைந்தார்.

இதுபோன்று 2000 நாட்களை அண்மித்து நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய் தந்தையரும் நீதி கிட்டாமலேயே போராட்டக்கொட்டில்களிலேயே மடிந்து போகும் அபாயத்தினை காண்கின்றோம்.

இந்த நிலைமை மோசமடைகின்றது. இந்தத் தாயின் மகன் பயங்கரவாதத் தடைச் சட்டம் காரணமாக 26 ஆண்டுகளாக சிறையில் நீதியின்றி விடுதலைக்காக ஏங்குகின்றார்.

அவர் தண்டிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மனித உரிமைகளை நசுக்கும் காட்டுமிராண்டித்தனமான சட்டம் என உலகமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான அநீதியான சட்டங்கள் வாயிலாகவே அப்பாவிகள், அல்லது சிறு குற்றங்களுடன் தொடர்புபட்ட தமிழ் இளையோர் சிறைகளில் தசாப்தக்கணக்கில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

தசாப்சக்கணக்கில் நீதி கிட்டாது தாய்மார் மாண்டு போவது அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலில் இருந்து விடுவிக்கும் நிலைமையாகவே அமையும் என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தாய்மார்களே நீக்காக விட்டுக்கொடுப்பின்றி போராடுகின்றனர். அவர்களே அரசுக்கு எதிரான சாட்சியமாகவும் காணப்படுகின்றனர். தசாப்சக்கணக்கில் நீதி கி;ட்டாது தாய்மார் மாண்டு போவது அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலில் விடுவிக்கும் நிலைமையாகவே அமையும் என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.