பசில் ராஜபக்ச விவகாரம் காரணமாக அரசாங்கத்திற்குள் குழப்பநிலை

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியாகியுள்ள தகவல்கள் காரணமாக அரசாங்கத்திற்குள் பாரிய குழப்ப நிலையும் பிளவும் ஏற்பட்டுள்ளது என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்சவின் இரட்டை பிரஜாவுரிமையை காரணம் காட்டி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதை எதிர்த்துள்ளன.

இவர்கள் இது குறித்த தங்கள் அதிருப்தியை பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் வெளியிட்டுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தில் அவருக்காக உருவாக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியே இம்முறையும் பசில் ராஜபக்சவிற்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்சவிற்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற அறிக்கைகள் முதலில் வெளியான போதிலும் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது பிரதமரே தொடர்ந்தும் நிதியமைச்சராக பதவி வகிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் நிதியமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற சில நிறுவனங்களை பசில் ராஜபக்சவிற்கான அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான திட்;டம் காணப்படுகின்றது.

இதேவேளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பு காரணமாக பசில் ராஜபக்சவிற்கு அமைச்சர் பதவியை வழங்குவது தாமதமாகலாம் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.