பட்டினியால் வாடிய சிறுவன் மூதூரில் பரிதாபமாக மரணம் – மூதூரில் பரிதாபமாக மரணம் மனதை நெகிழவைக்கும் துயரம்
மிகக் கொடிய வறுமையால் பட்டினியால் வாடிய சிறுவன் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந் தார். இந்தத் தகவலை அந்தப் பகுதியின் சுகாதார தரப்பினர் உறுதி செய்துள்ளனர்.
மூதூர் – 64ஆம் கட்டை – சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்க விநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிருக்கும் வைரமுத்து ராமராஜன் என்ற சிறுவனே பட்டினியின் கொடுமையால் உயிரிழந்தார்.
இது குறித்த தகவல்களை மூதூர் பாரதிபுரம் – கிளிவெட்டியில் உள்ள மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவில், மூதூர் – 64 ஆம் கட்டை, சகாயபுரம் கிராமத்தில் மிகவும் வறுமை நிலையில் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவர்களில் தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வந்த சிறுவன் ராமராஜன் குடும்பமும் ஒன்றாகும். இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆலயத்துக்கு சென்று தன்னால் முடிந்த பணிகளை செய்வான். அறநெறி பாடசாலைக்கு ஆர்வத்துடன் வருவான். எனினும், வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லை. இந்த நிலையில் நாங்கள் முடிந்தவரை அடிக்கடி சிறு உதவிகளை சிறுவன் குடும்பத்துக்கு செய்து வருகின்றோம். கடந்த வாரம் உண்ண உணவின்றி பலவீனமாக இருப்பதாகவும் அவர்களின் தற்காலிக வீட்டில் உள்ளேயும் வெளியேயும் மழை வெள்ள நீர் தேங்கி நிற்பதாகவும் எமது பணியாளர்களால் படத்துடன் உறுதிபடுத்தப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக சமூக நலன் விரும்பி ஒருவரிடம் என்பவரிடம் இருந்து நிதியை பெற்று ஒரு மாதகாலத்துக்குப் போதுமான 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருள்களை பெற்று கொடுத்தோம். நாங்கள் சிறுவனின் நிலை அறிந்து அவரின் வீட்டுக்கு சென்றபோது அவர் எழுத்திருக்க முடியாத நிலையில் சோர்ந்து காணபட்டார். அவர்களின் வீட்டுக்குள் மழை நீர் வழிந்தோடியது. வீட்டுக்குள்ளே போக முடியாதபடி சுற்றிவர நீர் தேங்கி நிற்பதை யும் காணமுடிந்தது.
இந்த நிலைகண்டு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினேன். இனிமேலாவது இருக்கின்ற சிறுவர்களை பாதுகாக்க அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். சகாயபுரம் கிராமம் போன்று பல கிராமங்களில் வறுமையின் கோரப் பிடி யில் சிக்கி பெருமளவு மக்கள் கவனிப்பாரற்று உள்ளனர். இவ்வாறனவர்களுக்கு நாம் உதவி வருகிறோம். அதிகாரிகளும் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.