பண்டோரா ஆவணக் கசிவில் இடம்பிடித்திருந்த திருக்குமார் நடேசன்: மற்றொரு பட்டியலிலும் இடம்பிடித்தார்

கார்கில்ஸ் (சிலோன்) பிஎல்சியின் முதல் 20 பங்குதாரர்கள் பட்டியலில், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் தொழிலதிபர் திருகுமார் நடேசனும் இடம்பிடித்துள்ளார்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கசிந்த பண்டோரா பேப்பர்ஸில் பெயரிடப்பட்ட நடேசன், 2021, செப்டம்பர் இறுதியில் காா்கில்ஸின் கிட்டத்தட்ட 600, 000 பங்குகளை அல்லது 0.23 சதவீத  பங்குகளை வைத்திருந்தார்.

அத்துடன் அதன் 18வது பெரிய பங்குதாரராகவும் இருந்தாா்.

புலனாய்வுச் செய்தியாளா்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்ட பண்டோரா ஆவணங்களில், நடேசன் மற்றும் நிருபமா ஆகியோர் பல்வேறு வெளிநாட்டுக் கணக்குகள்  மற்றும்  சொத்துக்கள் வைத்திருப்பதற்காக பெயரிடப்பட்டிருந்தனா்.

இதனையடுத்து பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவிற்கு இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தாா்.

எனினும் தாமும் தமது மனைவியும் முற்றிலும் நிரபராதி என்றும் எந்தத் தவறும் செய்யாதவா்கள் என்றும் நடேசன் , ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தொிவித்திருந்தாா்.

இதற்கிடையில், கார்கில்ஸின் முதல் 20 பங்குதாரர்களில் மற்றொரு தமிழரும் இணைந்துள்ளாா்.

A. I. டொமினிக் என்டோயின் இந்திரஜித்   என்ற அவா், நியூயோா்க்கில் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சோ்ந்தவராவார்.

2021 செப்டம்பர் இறுதியில், அவா்,  கார்கில்ஸின் 1.96 மில்லியன் பங்குகளை கொண்டிருந்தார்.