அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்களைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மாறாக அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு ‘பயங்கரவாதம்’ என்ற குற்றம் அதற்கான புதிய வரைவிலக்கணத்துடன் தண்டனைச்சட்டக்கோவையில் உள்ளடக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் அவசியமான திருத்தங்களுடன் நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இவ்வாண்டுக்கான செயற்திட்டம் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நோக்கிலான சந்திப்புக்கள் கடந்த 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.
அச்சந்திப்பின்போது இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
சித்திரவதைகள் மற்றும் மிகமோசமானதும் மனிதாபிமானமற்ற வகையிலும் நடாத்தப்படுதல் ஆகியவற்றுக்கு எதிரான பிரகடனத்தின்படி இலங்கை அரசாங்கம் ஒரு ‘தேசிய தடுப்புப்பொறிமுறையாக’ மனித உரிமைகள் ஆணைக்குழுவை ஸ்தாபித்தது.
இருப்பினும் தேசிய தடுப்புப்பொறிமுறையானது தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் தனியொரு பிரிவாக நிறுவப்படவுள்ளது. தடுப்புக்காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள் உள்ளடங்கலாகப் பல்வேறு கட்டமைப்புக்களிலும் சித்திரவதைகளையும் மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்படுவதையும் தடுக்கும் வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
அடுத்ததாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை நாம் ஆதரிக்கவில்லை. மாறாக அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்பதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.
‘பயங்கரவாதம்’ என்ற குற்றமானது அதற்கான புதிய வரைவிலக்கணத்துடன் தண்டனைச்சட்டக்கோவையின்கீழ் உள்ளடக்கப்படவேண்டும். பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் அவசியமான திருத்தங்களுடன் நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் பயங்கரவாதக்குற்றம் தொடர்பில் சாட்சிகள் கட்டளைச்சட்டத்தைப் பயன்படுத்துவதிலிருந்து விலகியிருக்கத் தேவையில்லை என்றும் ஆணைக்குழு கருதுகின்றது.
உரியவாறு வரையறுக்கப்படாத தடுப்புக்காவல் காலம் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். ஆகவே இதனைச் சீர்செய்வதற்கு தண்டனைச்சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைச்சட்டக்கோவை ஆகியவற்றில் திருத்தங்களும் நீதிமன்றக்கட்டமைப்புச்சட்டம், பிணைச்சட்டம் ஆகியவற்றில் ஏற்புடைய மாற்றங்களும் அவசியமாகின்றன.
அதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச்சட்டத்தின் 10(டி) சரத்தின்கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் பரிந்துரைகளை முன்வைத்தது.
மேலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றப்பேரவையின் மேற்பார்வையுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டாலும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் மாத்திரமே அவர்களை நீக்கமுடியும் என்பது குறித்தும் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆணைக்குழுச்சட்டத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது, அரச நிர்வாகக்கட்டமைப்புடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்காது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவிருப்பதுடன் அங்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
அத்தோடு காணாமல்போனோரின் குடும்பத்தினரை அடையாளங்கண்டு, அதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் அதிகாரிகளை உள்வாங்குவது மிகவும் அவசியம் என்று பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவ்விரு மாகாணங்களிலும் தமிழ் அதிகாரிகளை இணைத்துக்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார். அத்தோடு இவ்விடயத்தில் இடம்பெறும் முன்னேற்றகரமான நகர்வுகள் குறித்த அறிக்கையும் பொலிஸ்மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.
சமூக வலைத்தள செயற்பாடுகள் மற்றும் கருத்துச்சுதந்திரம் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு விளக்கமளிக்கப்பட்டிருப்பதுடன் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நிகழ்நிலையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அத்தோடு பெருந்தோட்டத்தொழிலாளர்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கான செயற்திட்டமொன்று ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்தும் இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.