பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்து தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆளுகின்றது அரசு – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அரசு தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆண்டு கொடிருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் இன்றையதினம் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் போராட்டமானது, முல்லைத்தீவில் இராணுவத்தினரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும், திருகோணமலையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும் மேலாக தற்போதைய அரசாங்கத்தின் முன்னைய ஆட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் என அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரும் ஒரு போராட்டமாகவே இதனைப் பார்க்கின்றோம்.

ஊடகவியலாளர்கள் உண்மையை வெளியில் கொண்டு வருபவர்கள். உண்மையை விரும்பாத இந்த அரசினால் கடந்த காலங்களிலே இவ்வாறு ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி இந்த நாட்டிலே ஒரு இராணுவ ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகின்றது.

இதன் காரணமாக இறந்தவர்களைக் கூட நினைவு கூர முடியாமல் நாங்கள் நிற்கின்றோம். தெற்கிலே இறந்தவர்களைத் தாராளமாக நினைவுகூரக்கூடிய நிலை இருக்கும் போது வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களாகிய நாம் எமக்காக இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலையில் இருக்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அரசு தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆண்டு கொடிருக்கின்றது.

இந்த அரசிற்குச் சர்வதேசத்தினால் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறிக் கொண்டிருக்கின்றது. அதன் நிமித்தம் அச்சட்டத்தை மாற்றியமைக்கவுள்ளதாக அரசு தெரிவித்திருக்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நீக்கி அரசியற் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றோம்.

இந்த நாட்டிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பல குற்றச் செயல்களைச் தமிழினத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்படுத்தி வந்த அந்தத் தேரரை ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு நியமித்திருக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்தப் புதிய அரசியலமைப்பிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையிலே சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்றே அது உருவாகும் என அறிய முடிகின்றது.

13வது திருத்தச் சட்டம் வடகிழக்கிற்கு மாத்திரம் தேவையானது அல்ல. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி அதனூடாக மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் தான் வடகிழக்கு மாத்திரம் அல்ல தெற்கில் கூட பொலிஸ் அதகாரங்களை அந்தந்த மாகாணங்கள் பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

எனவே சர்வதேசம் இந்த நாட்டில் நடப்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது. நேற்றைய நிகழ்விற்கான தடைவிதிப்பினைக் கூட சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எனவே சர்வதேசம் இந்த நாட்டின் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த நாட்டிலே அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

இந்த அடக்குமுறை தொடருமாக இருந்தால் எமது போராட்டம் தொடர்ச்சியாக இருக்கும். நாங்கள் எப்போதும் ஊடகவியலாளார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.