இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இந்த வர்த்மானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களின் அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விதிகளின் கீழ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.
அத்துடன், சட்டத்தரணி ஒருவருக்கு தடுப்புக்காவல் அல்லது விளக்கமறியலில் தடுத்து வைத்திருக்கும் நபரை பார்வையிட செல்லமுடியும் என்பதுடன், சந்தேகநபரின் உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.
இந்தத் திருத்தங்கள், தடுப்புக்காவல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தடுத்து வைக்கும் காலத்தை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகக் குறைக்கவும் வழிவகை செய்கின்றன.
அத்துடன், குறித்த திருத்தங்கள் ஊடாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் நிலை குறித்து ஆராய்வதற்கு நீதவானுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது.
மேலும், சந்தேகநபரை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கும் இதன் மூலம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.