‘பரிசோதனை உபகரணங்கள்’ வழங்குமாறு இந்திய, பிரித்தானியவிடம் ரெலோ தலைவர் செல்வம் எம்பி கோரிக்கை

வன்னி மாவட்ட வைத்தியசாலைகளிற்கான பரிசோதனை உபகரணங்கள் வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னிமாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தினால் உடனடியாக தொற்றாளர்களை அடையாளம் காண முடியாமல் இருக்கின்றது.

குறிப்பிட்ட அளவான பரிசோதனைகளை செய்வதற்கே வசதி இருப்பதால் அதன் முடிவுகள் வருவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுப்பதனால் தொற்றுக்கள் அதிகமாக பரவுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த தொற்று பரிசோதனைக்கான உபகரணங்கள் இல்லாமையும் அவற்றிற்கான பற்றாக்குறையும் இருப்பதனாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்யவேண்டும.

எனவே காலம் தாழ்த்தாமல் தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்கும் உடனடியாக முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கும் வன்னி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை தந்துதவுமாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும் உடனடியாக இந்த பரிசோதனை உபகரணங்கள் வன்னி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிறப்புரிமையடிப்படையில் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் அபாய நிலை வருவதற்கு முன்னதாக இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வன்னி மக்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்று தனது கோரிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.