பலாலி சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா நிலை காரணமாகவே மூடப்பட்டுள்ளது தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களுக்குமாக மூடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனாசூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. அதே போல தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல பலாலி விமான நிலையம் திறக்கப்படும். தற்போது பலாலி விமான நிலையத்தில் சில திருத்த வேலைகள் செய்ய வேண்டி உள்ளது குறிப்பாக ஓடுபாதை விரிவுபடுத்த வேண்டி உள்ளது.
மேலும் பல விமான சேவைகளுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் காரணமாக சற்று தாமதநிலை காணப்படுகின்றது எனினும் அந்த வேலைகள் முடிந்த பின்னர் விரைவாக பலாலி விமான நிலையம் திறக்கப்படும்.
இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் ஏதாவது நீங்கள் பேச நினைக்கிறீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது,
அது ஒரு நீண்டகாலப் பிரச்சினை இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினை எனவே வந்த பிரச்சினை தொடர்பில் இரண்டு நாட்டு பிரதிநிதிகளும் பேசி ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் அந்த பிரச்சினையை இனியும் நீண்ட காலத்திற்கு இழுத்துச் செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.