பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியில் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

‘கோட்டா – ரணில் சதி அரசாங்கத்தை விரட்டுவோம், முறைமையை மாற்றுவோம்’ எனும் தொனிப்பொருளிலான பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி அழகியற்கலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பொலிஸார் அவ்விடத்திற்கு சென்று அதனை நிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுத்தனர்.

எனினும், கொழும்பு நகர மண்டபம் , மருதானை, தொழில்நுட்ப சந்தியை தாண்டி ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டையை சென்றடைந்தது.

இதற்கிடையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொழும்பு கோட்டை பகுதியிலுள்ள எந்தவொரு அரச நிறுவனங்களுக்குள்ளும் 5 வீதிகளுக்குள்ளும் பிரவேசிக்க முடியாதவாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய உத்தியோகபூர்வ இல்லங்களுக்குள் பிரவேசிப்பது , பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகக் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பொலிஸார் இதனைக் கூற
முற்பட்டபோது அங்கு இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதால், பொலிஸார் அங்கிருந்து ஓடிச்சென்றனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் உலக வர்த்தக மைய வளாகத்தை அடைந்தனர்.

இதன்போது, பொலிஸாரால் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

அப்பகுதியில் தமது வேலைகளில் ஈடுபட்டிருந்த சாதாரண மக்களும் பொலிஸாரின் கண்ணீர்ப்புகை, நீர்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டனர்.