பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதாக சஜித், அநுர அறிவிப்பு

மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வார பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் பாராளுமன்றத்தில் அறிவித்தனர்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கையில்,

இந்நாட்டின் துன்பப்படும் மக்களின் அபிலாஷைகளையோ அல்லது இந்நாட்டின் பாரதூரமான வீழ்ச்சியைத் தடுக்கவோ, அல்லது இந்நாட்டை கட்டியெழுப்பவே எந்த திட்டமும் இல்லாத அரசாங்கத்தைக் கொண்ட பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (21) காலை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

வரிசையில் நிற்கும் மக்கள் படும் துன்பகளை புரிந்து கொள்ளாத, பால் மா இன்றி தவிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் துயரங்களை புரிந்து கொள்ளாத, திருடுவதற்கும் சுரண்டுவதற்கும் கை தூக்கும் பாராளுமன்றம் வெறும் கதையாடல் கடை மாத்திரமே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.