வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இராணுவ மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் கோரி முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கத்தை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களுக்கு, பிரித்தானியாவில் முக்கியமான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் தமிழ் அமைப்புகள் பூரண ஆதரவை வழங்கியுள்ளன.
தமிழ் அமைப்புகள் ஆதரவு
பிரித்தானிய தமிழ் கன்சர்வேடிவ் அமைப்பு,லிபரல் ஜனநாயக கட்சியின் தமிழ் நண்பர்கள் அமைப்பு மற்றும் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பு என்பன நாளை(25.04.2023) நடைபெறவுள்ள பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கில் நிர்வாக முடக்கல்
அறிக்கை ஒன்றின் ஊடாக குறித்த தமிழ் அமைப்புகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சர்வதேச சமூகத்தினால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்பவற்றிற்கு எதிராக இலங்கை செயற்பட்டு வருகின்றது.
தமிழர்களின் தாயக பூமியில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் கடுமையான இராணுவ பிரசன்னத்தை பேணி வருகின்றது.
இராணுவத் தலையீடு
சிவில் விவகாரங்களில் அடிக்கடி இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்படுவதுடன், தீவில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவும், அடி பணியச் செய்யவும் தொடர்ச்சியாக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் வடக்கு-கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது முடக்கத்திற்கு பூரண ஆதரவு வழங்குகின்றோம் என்பதுடன் அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், வடக்கு கிழக்கு வாழ் மக்கள் அனைவரும் இந்த பொது முடக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோருகின்றோம்.
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.