இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். 18 நவம்பர் 2021 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கொழும்பில் அமைந்த உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் மற்றும் சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் ஐநா பிரேரணை சம்பந்தமாகவும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டன.
பிரித்தானியாவின் தலைமையிலே ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையின் முக்கியத்துவம் அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், அவற்றில் காணப்படுகின்ற முன்னேற்றங்கள், அதன் அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பனவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. கால வரையறை யோடு கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற 18 மாதங்களே உள்ளன. அதில் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் ஒருபுறம் இருக்க தமிழ் தரப்பினரால் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களிலும் அக்கறை செலுத்துவது பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன.
இதன் பிரகாரம் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்க முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐ.நா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
நாடு எதிர்காண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள், தமிழ் மக்களும் நாட்டு மக்களும் முகம் கொடுக்கும் அவலங்கள், கோரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என பிற விபயங்களும் கலந்துரையாடப்பட்டன.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.