புதிய எல்லை நிர்ணயத்துக்கமைய தேர்தலை நடாத்த முடியாது – ஐக்கிய மக்கள் சக்தி

தேசிய எல்லை நிர்ணய குழுவின் செயற்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே, அதன் அறிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய எல்லை நிர்ணயத்துக்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த இடமளிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய எல்லை நிர்ணயத்துக்கமைய அரசாங்கம் தேர்தலை நடத்த முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் வினவியபோது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், அக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பில் பல தரப்பினராலும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில், அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாயின், அது சட்டத்துக்கு முரணானதாகும்.

எனவே, அரசாங்கத்துக்கோ அல்லது தேர்தல் ஆணைக்குழுவுக்கோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யவோ, வேட்பாளர்களிடம் கட்டுப்பணத்தை மீள செலுத்தவோ முடியாது.

சட்ட ரீதியில் அது இலகுவான விடயமல்ல. காரணம், புதிய எல்லை நிர்ணயத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால், எந்தவொரு அரசியல் கட்சியும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. அவ்வாறிருக்கையில், இது குறித்த சட்ட மூலத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?

மாறாக, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் மீண்டும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அடுத்த ஒரு வருடத்தில் கூட இதனை செய்ய முடியாது. எனவே, வார்த்தைகளால் கூறுவதைப் போன்று அது இலகுவான விடயமல்ல. தேர்தல் ஆணைக்குழுவும் உண்மைகளை பகிரங்கமாக கூற முடியாத நிலையில் உள்ளது என்றார்.

டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது

டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர்  என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொவிட் கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற  ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

டியாகோ கார்சியாவில் தான் பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்- மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது.