புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்ட இலங்கை எதிர்பார்த்துள்ளது, – அமைச்சர் ரமேஸ் பத்திரண

இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்டுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.

ஐ.நா செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில் உள்ளகப் பொறிமுறையின் ஊடாக இலங்கையின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்களுக்கு வருமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டிருந்தார்.

இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“அரசியல் கட்சி மற்றும் அரசாங்கம் என்ற ரீதியில் எந்த இனத்தவர்களாக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும் அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எமது கடமையாகும். இது தொடர்பில் நாம் திறந்த மனதுடன் இருக்கின்றோம்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக நாம் சிங்கள மக்களின் உரிமைகளை மாத்திரமன்றி தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாத்திருந்தோம்.

பாதுகாப்புப் படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருந்த போது சிங்கள மக்களை விட தமிழ் மக்களே அதிகமான கஸ்டங்களுக்கு உள்ளாகினர்.

எமது பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்தது மாத்திரமன்றி, தமிழ் மக்களும் இந்நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தனர்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக வடபகுதியில் உள்ள மக்களின் உயிர்களை மாத்திரம் காப்பாற்றவில்லை.

அப்போதைய காலக்கட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் நாம் அபிவிருத்திகளை மேற்கொண்டோம்.

வடமாகாணத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இருக்கின்றார்.

இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்டுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது.

நாம் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. அரசாங்கம் தொடர்பில் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தால் பேச்சுவார்த்தை மேசையில் கலந்துரையாடி வேறுபாடுகளைக் களைந்து கொள்ளலாம்.” என்று குறிப்பிட்டார்.