புலம்பெயர் உறவுகளின் உதவிகளை இலங்கை அரசாங்கம் பெற விரும்பினால் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை முன்வைப்பதுடன் தனது நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றில் நேற்று(23) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறிப்பிட்ட சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையையும், அதேபோன்று புலம்பெயர் தனிநபர்கள் சிலரின் மீதான தடையையும் நீக்கியுள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நம்பகத்தன்மை தமிழ்த் தேசிய பரப்பில் அரசியல் பணியாற்றும் சில கட்சிகளும் அமைப்புகளும் இதனை வரவேற்றுள்ள அதேவேளை, பலர் இந்த அறிவித்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
ரணில் மற்றும் மைத்திரி அரசாட்சியின் போது, இந்தத் தடைகள் நீக்கப்பட்டிருந்தபோதிலும், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் மீண்டும் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.
இது ஒருபுறமிருக்க, ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்ற காலங்களில், இலங்கை அரசாங்கம் இவ்வாறான சில அறிவித்தல்களை வெளியிடுவதும் ஒரு நடைமுறையாக இருக்கின்றது.
இலங்கை இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றது. ஒன்று பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையில் இருக்கின்றது. அந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவையாக இருக்கின்றது.
அவ்வாறான நிதி நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதும் அதேசமயம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகம் போன்றவற்றைத் திருப்திப்படுத்துவதும் இலங்கைக்கு முக்கியத் தேவைகளாக இருக்கின்றது.
ஆகவே, புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் என்பது அரசாங்கம் தன்னைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகவே தோற்றம் அளிக்கின்றது.
இலங்கை அரசாங்கம் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும் அந்த உறுதிமொழிகளிலிருந்து பல சந்தர்ப்பங்களிலில் பின்வாங்கியிருக்கின்றது.
தமிழ்த் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதும், இந்திய மற்றும் இலங்கை ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையெழுத்து வைத்ததன் பின்பாக, அந்த ஒப்பந்தத்தின் பல சரத்துக்களை ஒருதலைப்பட்சமாகவே விலக்கிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், 13ஆவது திருத்தத்தில் உள்ள அம்சங்களையே நடைமுறைப்படுத்த மறுப்பதும், இவற்றுக்கு நல்ல உதாரணங்களாகும். ஒருசில அமைப்புக்கள் மீது நீக்கப்பட்ட தடையை, வரப்போகின்ற புதிய அரசாங்கம் விலக்கிக்கொள்ளமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்த நாட்டிலிருந்து மில்லியன் கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்வதற்குக் காரணமாக இருந்த தமிழ் மக்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை. அரசாங்கம் தனக்குத் தேவையான நேரங்களில் சில தற்காலிக ஏற்பாடுகளினூடாக புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற முயற்சித்து வருகின்றது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு
இந்த விடயங்களை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழர்களும் சரியாகப் புரிந்துள்ளனர் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ளவேண்டும். மிக நீண்டகாலமாக இருக்கக் கூடிய தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான ஒரு தீர்வை முன்வைப்பதுடன், இந்த நாட்டில் சம பங்கைக் கொண்டுள்ள தமிழ் மக்களை சமத்துவமாக நடத்துவதற்கான கொள்கை முடிவுகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
அரசியல் சாசனத்தில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்த மறுப்பதும், கொடுக்கப்பட்ட உரிமைகளையே மீளப் பறித்தெடுப்பதும் என்ற போக்கு தொடர்ச்சியாகவே நிலவி வருகின்றது.
ஆகவே, ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கின்ற போக்குக்கும், அரசியல் சாசன விடயங்களை மேவிச் சென்று அரசியல் சாசனத்தில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்த மறுக்கின்ற போக்குக்கும் தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.
பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்குமாக இருந்தால், அந்த ஒத்துழைப்பு என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஊடாக நடக்க முடியுமே தவிர, கொழும்பை நம்பி அந்த ஒத்துழைப்புகள் வரமாட்டாது என்பதையும் இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டைக் கட்டியெழுப்புதல்
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுக்களும், அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுக்களும் இடம்பெற வேண்டும்.
அத்துடன் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை தொடர்பில் நியாயமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோருகின்ற அரசாங்கம் மேற்கண்ட விடயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
ஆனால், வெளி உலகத்துக்கு ஒரு பேச்சும், உள்ளார்ந்த ரீதியாக அதற்கு எதிரான போக்கையும் கடைப்பிடிப்பதையே எம்மால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
அரசாங்கத்தின் மீது நம்பகத்தன்மை ஏற்படுவது போன்ற எத்தகைய செயற்பாடுகளையும் காணமுடியவில்லை. தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டின் சமபங்காளிகளான தமிழ்த் தேசிய இனத்தையும் இணைத்துக்கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனை இருப்பதாக தெரியவில்லை.
தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என்ற போக்கிலேயே செயற்படுகின்றனர். இலங்கை அரசாங்கத்தின் இந்த போக்கை மாற்றுவதற்கு சர்வதேச சமூகம் தன்னாலான அனைத்தையும் செய்ய முன்வர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.