இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்தியா தவறியதையடுத்து புலம்பெயர் தமிழர்கள் சிலர் சீனாவின் உதவியைப்பெற முயற்சிப்பதை அறிந்து இந்திய புலனாய்வுத்துறையினர் தமது கவலையை வெளியிட்டுள்ளதாக ஹிந்து செய்திப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலண்டனில் அண்மையில் நடைபெற்ற மாநாடொன்றில் இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லையென்று புலம்பெயர் தமிழர்கள் கூறியதாக இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்தன.
வட இலங்கையில் சீனர்கள் தம் பிரசன்னத்தை நிலைநாட்டினால் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி ஆபத்தாக இருக்கும் என்பதையே மாநாட்டின் மூலம் அறிய முடிந்தது.
இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே சீனா இலங்கையில் முக்கியத்துவம் பெற காரணமாக அமைந்தது. இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் மற்றும் பொருளாதார தளத்தை உருவாக்குவதற்கு சீன அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதென்று இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்ததாக ஹிந்து பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.
வட இலங்கையில் சீனர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி இருப்பதற்கு அவர்கள் இத்தகைய முயற்சிகளை வரவேற்பார்கள் என்று புலம்பெயர் தமிழர்கள் கருதுகின்றனர். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர்களுக்கு உதவுவதைத்தவிர வேறு வழியில்லை.
சீன அறிவுஜீவிகளை தமது கருத்துக்களுக்கு சாதகமாக கவர்ந்திழுக்கும் வகையில் இலங்கை புலம்பெயர் தமிழர்கள் உலகலாவிய தம் செல்வாக்கைப் பயன்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.