பேரழிவில் சிறிலங்கா – மூன்று மாதங்களாக வாயே திறக்காத பசில்

“நாடு பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டின் நிதி நிலைமை குறித்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் மூன்று மாதங்களாகப் பேசவில்லை.

சபாநாயகர் அவர்களே, நாட்டின் நிதிநிலையை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க நிதி அமைச்சருக்கு உடனடியாக உத்தரவிடுங்கள்.” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

‘மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 148வது பிரிவின்படி நாடாளுமன்றத்திற்கு பண அதிகாரம் உள்ளது.ஆனால், இந்த நாடாளுமன்றத்தில் நமது நிதி அமைச்சர் கடைசியாக டிசம்பர் 10ஆம் திகதி பேசினார்.இன்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 3 மாதத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது .ஆனால் அவர் மூன்று மாதங்களாக நாட்டின் நிதி நிலை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை .

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது . எனவே, உடனடியாக உத்தரவை பிறப்பித்து, நாட்டின் நிதி நிலைமையை நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனியும் காத்திருக்க முடியாது என அவர் தெரிவித்தார்.