முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது மாநாட்டில் முக்கிய பல முடிவுகளை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அவர் பொது அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘ஒன்றிணைந்து எழுவோம்; களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளுடன் கடந்த 8ஆம் திகதி பொதுஜன பெரமுன முதலாவது கூட்டத்தை களுத்துறையில் நடத்தியது.
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயத்துறையில் எடுத்த தீர்மானம் பொதுஜன பெரமுனவின் வீழ்ச்சிக்கு ஆரம்பமாக அமைந்ததாகவும், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை எனவும் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியராச்சி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவில்லை. 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இவ்வாறான பின்னணியில் நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி கட்சியை பலப்படுத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அதற்கமைய பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நாவலப்பிட்டி நகரில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.