பொதுஜன முன்னணியின் கூட்டணிக்கட்சிப் பிரதிநிகளைச் சந்தித்தார் சஜித்

அரசாங்கத்திற்கு எதிராக பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அறிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணிக்கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலான பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிதிகளான மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

இருப்பினும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற தொனியில் கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்ட நிலையில், சுமுகமான முடிவொன்று எட்டப்படாமல் இப்பேச்சுவார்த்தை நிறைவிற்கு வந்துள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (10) முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேனவுடன் பாராளுமன்றத்தில் சுயாதீனமானச் செயற்படப்போவதாக அறிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சிலரும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை சஜித் பிரேமதாஸவுடன் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கலந்துகொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்னவென்று அறிந்துகொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவைத் தொடர்புகொண்டு வினவியபோது, அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, மீண்டும் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவரல், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு கையாளுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.

இருப்பினும் அரசாங்கத்திற்கெதிராகப் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அறிவித்த உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்களா? இல்லையா? என்பதை அறிந்துகொள்வதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம் என்று கட்சியின் உள்ளகத் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

ஆனால் இச்சந்திப்பில் கலந்துகொண்ட மைத்திரிபால சிறிசேன உள்ளடங்கலாகக் கூட்டணிக்கட்சிகளின் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற தொனியில் கருத்து வெளியிட்ட நிலையில், சுமுகமானதொரு முடிவு எட்டப்படாமல் இந்தப் பேச்சுவார்த்தை நிறைவிற்கு வந்துள்ளது.

எது எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளும், சுயாதீனமாகச் செயற்படும் மேலும் சில சட்டத்தரணிகளும் இணைந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, அதற்குப் பதிலாக மாற்றுத் திருத்தமொன்றைக் கொண்டுவருவதற்கான வரைவைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க சுமார் இருவாரங்களுக்கு முன்னதாக (நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைவதற்கு முன்னர்) முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவைத் தொடர்புகொண்டு, இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கைவிடுத்திருக்கின்றார்.

இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக்கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், இடைக்கால அரசாங்கத்தில் இணைவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் ஊடாக ஆளுந்தரப்பினர் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதன்போதும் இடைக்கால அரசாங்கத்தில் இணைய விரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, இடைக்கால அரசாங்கத்தில் இணையும் பட்சத்தில் வெளிவிவகார அமைச்சு, நிதியமைச்சு, சுகாதார அமைச்சு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு உள்ளடங்கலாக 5 அமைச்சுப்பதவிகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குவதாகக்கூறிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கும் பிரதான எதிரணி உடன்படாததையடுத்து, ஹர்ஷ டி சில்வாவை நிதியமைச்சராக நியமிப்பதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவையனைத்திற்கும் உடன்படாத ஐக்கிய மக்கள் சக்தி, தற்போது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணையைக் கொண்டுவருவதற்குத் தீர்மானித்திருப்பதுடன் அதற்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.