பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் – இலங்கை மத்திய வங்கி

சர்வதேச கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.

பொருளாதாரத்தின் நிலை, சவால்கள் மற்றும் முன்னோக்கு மத்திய வங்கியின் 2022 வருடாந்த அறிக்கை என்ற தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஊகங்கள் இருந்தாலும், நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மத்திய வங்கி எப்போதும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஒருவித உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் இருந்தாலும், பொதுமக்களின் வைப்புத்தொகையைப் பாதுகாப்பது மற்றும் வங்கி அமைப்பின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வட்டி விகிதங்கள், குறிப்பாக சந்தை வட்டி விகிதங்கள் ஆண்டின் இரண்டாம் பாதியில் வேகமாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் ஒற்றை இலக்க புள்ளிகளுக்குக் குறையும் என்றும், குறிப்பாக முழுமையான கடன் மறுசீரமைப்பு செயல்முறை அறிவிக்கப்பட்டவுடன் வட்டி விகிதங்களும் வேகமாகக் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.