பேரணி தற்போது திருகோணமலை மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
வாகன பேரணியாக செல்பவர்கள் வெருகல் பாலத்தை அண்மித்துள்ளனர். அம்பாறையில் ஆரம்பித்த பேரணி மட்டக்களப்பை கடந்து தற்போது திருகோணமலைக்குள் நுழைகிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து ஒட்டமாவடி நகரை அடைந்த நிலையில் பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.
2வது நாள் பேரணி இன்று வியாழக்கிவமை காலை மட்டக்களப்பு தாளங்குடா இருந்து ஆரம்பித்து ஆரையம்பதி காத்தான்குடி மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி வாழைச்சேனை வழியாக ஒட்டமாவடி நகர எல்லைக்குள் நுழைந்த போது முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எங்கே எங்கே உறவுகள் எங்கே, எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும். வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐநா சபையே தலையிடு, வழங்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றனர்.
1.45 PM
வாழைச்சேனையை சென்றடைந்த போராட்டம் அங்கிருந்து ஓட்டமாவடிக்கு செல்கிறது.
பேரணி வாழைச்சேனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர் அமீர் அலி ஆகியோர் ஓட்டமாவடியில் போராட்டத்தில் இணையவுள்ளனர். அங்கு சுமார் 2,000 பேர் திரண்டுள்ளனர்.
12.05PM
பேரணி தற்போது ஏறாவூரில் இருந்து செங்கலடி நோக்கி பயணிக்கிறது.
மட்டக்களப்பு நகரில் பேரணி முடிவடைந்ததை தொடர்ந்து, வாகன பேரணியாக ஏறாவூருக்கு வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
10.45AM
தாழங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை வீதி ஊடாக ஆரையம்பதி காத்தான்குடி ஊடாக மட்டக்களப்பு கல்லடி பாலத்தை அடைந்து கல்லடியில் இருந்து மாபெரும் எழுச்சி பேரணியாக மட்டக்களப்பு நகரத்தை அடைந்தது. அங்கு பேரெழுச்சியாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
பேரணி தற்போது காத்தான்குடி பகுதியை கடந்துள்ளது. காத்தான்குடியில் பெருமளவு முஸ்லிம் மக்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
எங்கே எங்கே உறவுகள் எங்கே? எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐநா சபையே தலையிடு, வழக்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற கொசங்களை எழுப்பினர்.
இன்றைய போராட்டத்தில் கோவிந்தம் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், செ.கஜேந்திரன், முன்னாள் எம்.பிக்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது கல்லடியை பேரணி நெருங்கி வருகிறது.
நேற்று போராட்டத்திற்கு இடையூறு விளைவித்த பாதுகாப் புதரப்பினர், இன்று பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
9.00AM
மட்டக்களப்பு தாழங்குடாவில் இருந்து பேரணியின் இரண்டாம் நாள் ஆரம்பித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் ஆரம்பிக்கும் பேரணி முல்லைத்தீவை அடையும்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.
இலங்கையில் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள், இன மத அடையாளங்களை அழிக்கும் அரசின் நடவடிக்கைகளிற்கு எதிராகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனத உரிமை மீறல் விவகாரங்களில் அழுத்தமான நடவடிக்கைகளை எடுக்க வலிறுத்தியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை திடீர் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அனைத்து கட்சிகளுடனும் பேசாமல் அரைகுறை ஏற்பாடுகளுடன் போராட்டம் ஆரம்பித்தாலும், தமக்கான போராட்டமென்ற அடிப்படையில் தமிழின உணர்வாளர்கள் இந்த போராட்டத்திலும் திரண்டனர்.
நேற்று பொத்துவிலில் இருந்து போராட்டம் ஆரம்பித்தது. பல்வேறு தடைகள், அடைமழைக்கு மத்திிலும் ஆரம்பித்த போராட்டத்தில் பல்வேறு தமிழ் தரப்புக்கள் பங்கெடுத்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தம் கருணாகரன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரன், மன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உள்ளிட்டவர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஷ், தேசிய அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டவர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர், தமிழ் உணர்வாளர் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு பகுதிகளிலும் வீதித்தடைகளை ஏற்படுத்தி பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் தடைகளை ஏற்படுத்த முயன்ற போது, போராட்டக்காரர்கள் அவற்றை தூக்கி எறிந்து விட்டு முன்னேறினர்.
பல்வேறு இடங்களிலும் நீதிமன்ற தடை கட்டளைகளை பொலிசார் விநியோகித்தனர்.
கோவிந்தம் கருணாகரன், பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் நீதிமன்ற தடை கட்டளைகளை பெற மறுத்து விட்டனர். களுவாஞ்சிக்குடி, கல்முனை பகுதி தடையுத்தரவுகளை பெற்று பேஸ்புக்கில் படமும் பகிர்ந்து விட்டதால், அந்த பகுதிகளில் இரா.சாணக்கியன் பேரணியில் கலந்து கொள்ளவில்லை. வாகனத்திலேயே இருந்து விட்டார்.
நேற்றைய போராட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது.
இன்று காலை 8.30 மணிக்கு போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கிறது. காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், ஓட்டமாவடி, செங்கலடி என நீளும் போராட்டம் திருகோணமலையை அடைந்து, அங்கிருந்து கொக்கிளாய் ஊடாக இன்று மாலை முல்லைத்தீவு நகரத்தை அடைகிறது.
தமிழ் நிலத்தின் இதயமான கொக்கிளாய், நாயாறு, மணலாறு, தென்னன்மரவடி பகுதிகளில் நீண்ட காலத்தின் பின்னர் தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் போராட்டமொன்றில் ஈடுபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.