பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களும் கிடையாது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கிடைக்கவிருக்கும் கடன் உதவி எதிர்காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காமைக்கான காரணம் என்னவென சிலர் எம்மிடம் வினவுகின்றனர். நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்களினதும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் கொள்கையும், முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்துமாயின் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தயாராகவே இருக்கிறோம்.
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் மக்களின் வாழ்க்கைக்கு பேரிடியாக அமைந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவளிப்பதால் நாம் நிராகரிக்கப்படுவோம்.
மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு எம்மிடம் கேட்கின்றனர். ஆனால் அனைத்து மக்களையும் மீட்டெடுக்கும் பொறுப்பு எமக்குள்ளது.
எதிர்க்கட்சி சமூக பொருளாதார கொள்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. சமூக பொருளாதார கொள்கையை அரசாங்கம் பின்பற்றினால் நாம் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார். இந்த அரசாங்கம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட இலங்கைக்கு நிதியளிக்கும் பல்வேறு குழுக்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறது.
இந்த அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் பற்றி பேசியது, குறித்த திட்டங்கள் எங்கே? மக்களை தூக்கிலிட்ட பின்னர் மக்களுக்கு உணவளிக்கும் முறைமையே காணப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் கடன் கிடைக்கவிருக்கிறது. இலங்கை நிதிச் சந்தையில் குறித்த நிதியை எவ்வாறு அரசாங்கம் பயன்படுத்தப் போகின்றது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
கடன் பெறும்போது அவர்களின் ஒப்பந்தந்தங்களுக்கு அடிபணிய நேரிடும். சில சரத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாததனாலேயே நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.
ஒப்பந்தம் வெற்றி என்றாலும் நிபந்தனைகளில் யாருக்கு பாதிப்பு என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களும், உழைக்கும் மக்களும் பாரியளவில் பாதிப்புகளை சந்திக்கவுள்ளனர்.கடன்பெற்று கொள்ளும்போது வறுமையிலுள்ள மக்களையும் உழைக்கும் மக்களையும் பாதுகாக்கும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
இந்த கடனை பெற்ற பின்னர் முதலாவது மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் எழும். அதிகளவிலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, பலரும் தொழிலை இழந்துள்ளனர். மின்கட்டணம் அதிகரிப்பு, உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக மக்களின் வருவாய் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.
கடந்த வருடம் பொ ருளாதார திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வருடமும் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு நாட்டு மக்களை தூக்கிட்டு கழுத்தை நெரித்து கொள்வதன் ஊடாக தானா பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்? சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்த பின்னர் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்றார்