பொலிஸ்மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை மீளாய்வு செய்ய தீர்மானம் – அரசாங்க சேவை ஆணைக்குழு

பொலிஸ்மா அதிபரினால் தமது ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட இரு அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(07) கூடவுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் இந்த இரு அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அரசியல் தலையீட்டுடன் 182 பொலிஸ் நிலையங்களுக்கான பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டமை அரச சேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கவனத்திற்கொள்ளப்பட்ட முதலாவது விடயமாகும்.

அரச சேவை ஆணைக்குழுவின் அறிவித்தலைத் தொடர்ந்து, 7 நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை பொலிஸ்மா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் கூற்றின் பிரகாரம், அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கு அமைவாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தால், பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தமது ஆணைக்குழு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கருத்திற்கொள்ளப்படுமென அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 03 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு திடீரென இடமாற்றம் வழங்கப்பட்டமை, அரச சேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இரண்டாவதாக கவனம் செலுத்தப்பட்ட விடயமாக அமைந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் தமக்கு அதிகாரம் காணப்படும் நிலையில் எவ்வித அறிவித்தல்களும் இன்றி அண்மையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விரு சம்பவங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டுள்ளதாகவே கருதப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரு அறிக்கைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(07) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரச சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.