ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையில் சனிக்கிழமை (14) நடைபெற்ற சந்திப்பின்போது பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நேரில் அழைக்கப்பட்டு அவர் மீது கடுமையான விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற தொனியில் பொலிஸ்மா அதிபரைக் கடிந்து பேசியுள்ளார்.
இது தொடர்பில் தெரியவந்துள்ளதாவது,
கடந்த திங்கட்கிழமை அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக ஒன்றுகூடியவர்கள் காலிமுகத்திடலுக்குச் சென்று அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போரடிக்கொண்டவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதால் பாரிய வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.
இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தாமதித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு பொலிஸ் மா அதிபர் முன்னிலையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அசலுவலகங்கள் என்பன அடித்து நொருக்கப்பட்டதோடு, தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறின.
அதனைவிடவும், முக்கியமான பொருட்கள் சூறையாடப்பட்டும் இருக்கின்றன.
இவ்வாறு நிலைமைகள் பாரதூரமடைகின்றபோது பொலிஸ்துறை அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபரிடத்தில் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.
அதனையொத்த வினாவையே ஜனாதிபதி கோட்டாபயவும் பொலிஸ்மா அதிபரிடத்தில் கோரியுள்ளார்.