போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் கண்டனம்

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம், தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு இலங்கை மக்களிடம் வேண்டுகோள்விடுத்திருக்கின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்றுதிரண்ட குழுவினர், அலரி மாளிகைக்கு முன்பாக காலி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்களை இடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாகத் தாக்கினர். அதனைத்தொடர்ந்து காலி வீதியின் ஊடாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’விற்குச் சென்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதனையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் வெடித்து அமைதியற்ற நிலையொன்று தோற்றம்பெற்றது.

இதுகுறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

‘இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதும், அவ்விடங்களில் இருந்தவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைத்தாக்குதல்கள் குறித்து நாம் மிகுந்த கவலையடைகின்றோம்.

அதேவேளை தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு நாம் இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்’ என்று அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவும் அதன் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது. அதன்படி சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

‘இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது நடத்தப்பட்டிருக்கும் வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் நிலைவரம் குறித்துக் கவலையடைகின்றோம். மேலும் குறித்த வன்முறைச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதுடன் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்’ என்று கூறப்பட்டுள்ளது.